Archive for the ‘Uncategorized’ Category

எம்ஜிஆர் பிறந்த நாள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

17/01/2012

இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான என தருமை கழக உடன்பிறப்புகளே! பெருமிதம் கொள்ளத்தக்க தன் வாழ்நாள் சேவைகளாலும், தன்னிடமிருந்து இந்தச் சமூகம் பெற்றுக்கொண்டதெல்லாம் நல்லதை மட்டுமே என்னும் பெருமை கொண்ட வாழ்வாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைத்த இடம் பிடித்து நினைவில் இருந்து நீங்காது வாழுகின்ற காவியமாம், கழக நிறுவனத்தலைவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் நாம் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியும், எல்லையில்லா இன்பமும் கொள்கிறோம்.

இந்த நன்னாளில், அந்த மாசற்ற தலைவரின் மங்காத நினைவுகளை, புரட்சித்தலைவர் மீது அளவற்ற அன்பும், பற்றுதலும் கொண்டிருக்கும் கழகக் கண்மணிகளாகிய உங்களோடும், தமிழக மக்களோடும் பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்தை தொடவிருக்கும் நிலையிலும், அவரது நிலைத்த புகழும், நிகரில்லா அழகும், நீதி உரைத்த அவரது தெளிவும், நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது வாழ்ந்திட்ட அவரது நேர்மைத் திடமும் இன்றும் தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

என் குடும்பம், என் மனைவி, என் துணைவி, என் மகன்கள், என் மகள்கள், என் பேரன், என் பேத்திகள் என்று தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, தன்னை சுற்றியே சிந்திக்கும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பிவிடுகிறது; தூரவே வீசிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் பதிவுகளும், சுவடுகளும் இல்லாத பாலைவனம் ஆகிவிடுகிறது.

ஆனால், தனக்காக வாழாது பிறரின் சிரிப்பில் தன் அகம் மகிழ்ந்து, பிறர் பசி தீர்ப்பதில் தன் மனம் நெகிழ்ந்து, இவ்வுலகில் இருக்கும் காலமெல்லாம், இல்லையென சொல்லாமல் எதிர்வந்து நிற்போர்க்கு அள்ளி அள்ளி கொடுத்து, பெறுபவர் முகம் பூரிப்பது கண்டு, அதில் உச்சி குளிர்ந்து, வள்ளலெனவே வாழுகின்ற மனித மகான்களை இந்தப் பூமி உள்ள காலம்வரை மானுடம் நெஞ்சார நினைத்தே போற்றும் என்பதற்கு நம் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் நிலைத்த புகழ் ஓர் நிகரில்லா சாட்சி அல்லவா!

‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி  மக்களின் மனதில் நிற்பவர் யார்?  மாபெரும் வீரர் மானம் காப்போர்  சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்றே, தான் பாடியபாடலுக்கு தானே இலக்கணம் ஆனவர் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அல்லவா? தன்னை பெற்றெடுத்த தாயையும், தன்னை ஆளாக்கி அழகு பார்த்த கலைத்தாயையும் கண்ணாகக் கருதி எந்நாளும் போற்றியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ‘நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்’ என்று தன்னை அரசியலில் அடையாளம் காட்டிய பேரறிஞர் அண்ணாவை கொடியிலும், கொள்கையிலும், தன் இதயத்திலும், இயக்கத்தின் பெயரிலும் கொண்டு ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்தை நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

கருணாநிதி என்னும் தீய சக்தியை வேறோடு சாய்த்து தமிழகத்தை ‘இரட்டை இலை’ மயமாக்கினார். ‘செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதெல்லாம் நடை முறைக்கு சாத்தியமாகாதே என்னும் யதார்த்தத்தை தான் பசித்திருந்த போதும், பட்டினி கிடந்தபோதும் உணர்ந்து உள்வாங்கிக் கொண்ட காரணத்தால், தன் கரங்களில் செங்கோல் கிட்டியதும் ÒபசிÓ என்ற வார்த்தையை பள்ளிக் கூட வளாகங்களில் இருந்தே விரட்டி அடிக்கும் விதத்தில், ‘சத்துணவுத் திட்டம்’ என்னும் சரித்திரப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்று, அவர் காட்டிய வழியில் தப்பாது நடக்கிற உங்கள் தாயின் கழக அரசும் விலையில்லா அரிசியை ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கே உள்ளம் குளிர்ந்திட அள்ளித்தந்து ‘பசி, பஞ்சம், வறுமை’ என்னும் அத்தனை வார்த்தைகளையும் தமிழகத்தின் எல்லையில் இருந்தே ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தி இருக்கிறது.

நம் கழக அரசு அன்னமிடுவதில் தொடங்கி, அறிவுசார் புரட்சிக்கு அச்சாரமிடுவது வரை எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கும் தலையாய முயற்சியில் விரைந்து செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்க்கு மடிக்கணினி, பாடப் புத்தகங்கள், சீருடைகள், பூகோள வரைபடத் தொகுப்பு, அக ராதி, வண்ண பென்சில்கள், காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணங்கள், சேட்டிலைட் கல்வி எனப்படும் செயற்கைக் கோள் வழிபாட வகுப்புகள் என உலகத்தரத்திற்கு நாளைய தமிழ் சமூகத்தை அழைத்துச் செல்லும் புரட்சியை நோக்கி உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான கழக அரசு வெற்றி நடைபோடுகிறது.

அதே வேளையில், வறுமைக்கோட்டிற்கு கீழே வாழப் போராடுகின்ற மக்களை கைதூக்கிவிடவும், ஏங்கி நிற்கும் ஏழைகளை தாங்கிப் பிடித்திடவும், விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகளை வழங்கி, பொருளாதார விடியலுக்கும், விவசாயம் சார்ந்த வெண்மைப் புரட்சிக்கும் தமிழகத்தை அழைத்துச் செல்லும் வேட்கையோடும் நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்படி, மக்கள் திலகம் அடித்தளமிட்ட அவரது மகத்தான வழியிலேயே மக்கள் சேவையை தொடர்ந்து ஆற்றி வரும் அதே வேளையில், புரட்சித் தலைவரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியையும், பல்கி பெருகிக் கிடக்கும் அவரது குடும்பத்தையும், தமிழ்நாட்டு அரசியலில் இருந்தே முற்றிலுமாய் அகற்றுவதற்கான காரியத்தை வெற்றிகரமாய் கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதர வோடும் செவ்வனவே செய்து கொண்டிருப்பதை இந்த நன்னாளில் எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். தலைமையின் மீது பற்றுதலும், நன்றியுணர்ச்சியும் கொண்டு பணியாற்றுவதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிஞ்சுவதற்கு இன்னொரு இயக்கம் இம்மண்ணில் இல்லை.

ஆனால், ‘கட்சியில் தலைமை நாற்காலியை பெரியாருக்காக காலியாக வைத்திருக்கிறேன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை தீயசக்தி கருணாநிதி காற்றில் பறக்க விட்டு, அந்த தலைமைப் பதவியை தன்வசம் ஆக்கிக் கொண்டார். எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் இல்லாது, கோடானு கோடி உடன்பிறப்புகளாகிய என் உயிரினும் மேலான எனதருமை கழகக் கண்மணிகளின் இன் முகத்தில் படரும் புன்னகைக் காகவும், ஏழரை கோடி தமிழ் மக்கள் என் மீது கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காகவும், என்னை மெய் வருத்தி உழைத்து, நான் புரட்சித் தலைவருக்கு அன்று தந்திட்ட உறுதியை, செய்திட்ட சத்தியத்தை இம்மியும் பிசகாமல் நிறைவேற்றி வருகிறேன் என்பதை பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெல்வதற்கு இன்னொரு இயக்கம் இம்மண்ணில் இல்லை என்னும் அரசியல் பொற்காலத்தை உருவாக்கி இருக்கிறோம். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’, ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்னும் புரட்சித் தலைவரின் வைர வரிகளை இன்னும் பட்டை தீட்டி ‘எப்படை வரினும் இப்படையே வெல்லும்’ என்னும் கம்பீர நிலைக்கு கழகத்தை உயர்த்தி இருக்கிறோம். நான் முன்பே சொன்னது போல், சாதனைகளுக்கும், வெற்றிகளுக்கும் முற்று என்பது கிடையாது.

கழகத்தின் வெற்றித்தேரோட்டம் தமிழகத்தின் எல்லை கடந்து இந்திய தேசத்தின் உச்சம் தொடுகிற பொற்காலத்தை எட்டுவதற்கு நாம் ஆயத்தமாவோம்! இந்திய அரசியலை தீர்மானிக்கும் ஈடு இணையில்லா இடத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இமயம் என உயர்த்திட இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்பதற்கேற்ப உலகமே உயர்த்திப் போற்றுகின்ற நம் ஒப்பற்ற தலைவராம், பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மலாம், கழகம் கண்டெடுத்த கலியுக வள்ளலாம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்வழியில் நாளும் நடப்போம்!

இனிவரும் நாளெல்லாம் நமக்கென்றே உழைப்போம்! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி மற்றும் இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே கம்பீரமாய் நிற்கும் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி உவகையுடன் கொண்டாடிட வேண்டும் என்று என தருமைக் கழக உடன் பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

மலைக்க வைக்கும் மன்னார்குடி ஜாதகம்!

25/12/2011

சிகலா குடும்பத்தின் முழுநீள ஜாதகம் இது! இப்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெயர் சிவப்பு நிறத்தில் உள்ளது. மொத்தம் 16 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். இதில் ‘மிடாஸ்’ மோகன் மட்டுமே சசிகலா குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரே நபர். சசிகலா, திவாகரன் மற்றும் சகோதர, சகோதரிகளான சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி ஆகியோரது வாரிசுகளில் சிலரும், எம்.நடராஜனின் சகோதரர்கள் இருவரும்தான் இப்போது விலக்கப்பட்டுள்ளார்கள். அடுத்து வரும் பக்கங்களில் ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

செல்லப்பிள்ளை தினகரன்!

டி.டி.வி. என அ.தி.மு.க-வினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி – விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, ‘அம்மா’வின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார். தேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாவல் பணிகளை மும்முரமாகக் கவனித்துக் கொள்வதற்காக தோட்டத்துக்குள் அழைத்து வரப்பட்டார். பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என மாறினார். மாமன் மகள் அனுராதாவை, ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய குளம் தொகுதி வேட்பாளர் யார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க… தினகரனைக் களமிறக்கினார் ஜெய லலிதா. ‘அம்மா வீட்டு வேட்பாளர்’ என்பதால், தேனி மாவட்டக் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது, தென்மாவட்ட நிர்வாகிகள் பலரும் இவருக்காக ஓடியாடி வேலை செய்து அமோக வெற்றியைத் தேடித் தந்தனர். அடுத்தடுத்து, இவருக்கு ஏறுமுகம்தான். கட்சியில் மாநிலப் பொருளாளர் பதவி தேடி வந்தது. பெரியகுளம் எம்.பி-யாக இருந்த போது, தனது தொகுதி மக்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்க… தேனி மாவட்டத்தினர், ‘மக்கள் செல்வன்’ என பட்டத்தைச் சூட்டினார்கள்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அறிவிக்கப்படாத அதிகார மையமாக தினகரன் மாறினார். ‘அடுத்த வாரிசு’ என்றும் இவரைச் சொன்னார்கள்.  2004 நாடாளுமன்றத் தேர்தலில் இடி. 40 தொகுதி களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்ற… தினகரனும் தோல்வியைத் தழுவினார். தினகரனின் அரசியல் பயணத்தில் வேகம் குறைந்தது.
 ”ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளர் சேடபட்டி முத்தையா, ஆண்டிபட்டி முத்துவெங்கட்ராமன், தற்போதைய போடி நகர்மன்றத் தலைவர் பழனிராஜ், முன்னாள் தேனி நகரச் செயலாளர் ராமராஜ், ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான போடி பன்னீர்செல்வம், தேனி ஜெயராமன், பெரியகுளம் டாக்டர் சலீம், கோபாலகிருஷ்ணன், பெரியவீரன், கம்பம் சுப்புராயர், முன்னாள் எம்.பி. ராமசாமி, ஆர்.டி கோபால் ஆகியோர் தினகரனை எதிர்த்ததால் வீழ்ந்தவர்கள்” என்றும் சொல்கிறார்கள். தினகரனால் அடையாளம் காணப் பட்ட ஒ.பி.எஸ்-க்கு பின்னர் தினகரன் வகித்த பொருளாளர் பதவி கிடைத்ததும் கடந்த 5 ஆண்டு களாக ‘அமைதிப்புறாவாக’ தினகரன் மாறிவிட்டதும் எதிர் பாராத திருப்பங்கள். ”தப்பு செய்தவங்களோட சேர்த்து, ‘சும்மா’ உட்கார்ந்து இருந்த அண்ணனையும் நீக்கிட்டாங்க” என்று தினகரன் ஆட்கள் புலம்புகிறார்கள்!இவர் குறித்துப் பேசும் கட்சியினர், ”நாடாளுமன்ற வேட்பாளராக தினகரன் பெரியகுளத்தில் காலடி வைத்தபோது, கட்சியில் சீனியரான ஓ.பன்னீர் செல்வத்தின் அடக்கத்தில் ஐக்கியமான தினகரன், அவரது தம்பி வீட்டில் குடியேறினார். ஓ.பி.எஸ்-சிடம் பணிவையும் தாண்டிய நம்பகத்தன்மையை உணர்ந்தவர்,
ஓ.பி.எஸ்-சை அம்மாவிடம் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தினார். இதுவே ஒ.பி.எஸ்-சை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது.  தினகரன் தேனிக்கு வரும் போதெல்லாம் சாரதியாக இருந்த தேனி முன்னாள் எம்.எல்.ஏ-வான  ஆர்.டி.கணேசன், தினகரனின்  செயலாளராக இருந்த போடி முன்னாள் எம்.எல்.ஏ-வான ராமதாஸ், ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் ஆகியோர் தினகரனால் வளர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்” என்கிறார்கள்.
சினிமா டு தொழில்
முன்பு ஜெயலலிதா தொடங் கிய, ஜெ.ஜெ. டி.வி-யின் நிர்வாக இயக்குனராக இருந்தவர், பாஸ்கரன். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் இரண்டாவது மகன். அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஆங்கிலச் சேனலுக்கு இணையாக அப்போது  டி.வி-யைக் கொண்டு சென்றார். அதனால் சினிமா ஜாம்ப வான்கள்கூட, தாங்களாகவே தேடிப் போய் நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்தார்கள். அரசியலில் ஆர்வம் இல்லாத காரணத்தால், ஆரம்பத்தில் இருந்தே போயஸ் கார்டன் பக்கம் நெருங்கியது இல்லை. ‘இவர் ஏலம் எடுத்த ஆந்திர மாநில கல்குவாரியில் நல்ல வருமானம்’ என்கிறார்கள். ஜெஜெ டி.வி. முடக்கப்பட்டபோது இவரும் முடங்கிப் போனார்.
சுதாகரன் திருமணத்தின்போது ஆஜானுபாகுவாக இருந்தவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திடீரென்று உருவம் இளைத்து சிக்கென்று வந்து நின்றார். ”என்னப்பா… சர்க்கரை ஜாஸ்தியா… இப்படி இளைச்சுப் போயிருக்கியே…” என்று உறவினர்கள் கரிசனத்தோடு குசலம் விசாரிக்க, ”சினிமாவுல நடிக்கப் போறேன்… அதுக்காக தினம் அஞ்சு மணி நேரம் எக்சர்சைஸ் செஞ்சு கஷ்டப் பட்டு உடம்பை இளைக்க வச்சிருக்கிறேன். என்னைப் பார்த்து வியாதிக்காரன்னு சொல்றீங்களே” என்று சிரித்திருக்கிறார். ”டைரக்டர் பூபதி பாண்டியனிடன் பேசிட்டு இருக்கேன். சீக்கிரமா ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ரோல் செய்யப் போறேன்” என்று சொன்னபடியே விதவிதமான கெட்டப்பில் பாஸ்கரன் கொடுத்த அசத்தலான போட்டோக்களைப் பார்த்து உறவினர்களே வாய் பிளந்தார்கள்.
”கருணாநிதி குடும்ப வாரிசுகள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி போன்றவர்கள் சினிமாவை ஆக்கிரமித்தார்கள். இதனால் தான் கடந்த ஆட்சிக்கே கெட்ட பெயர்.  இந்த நேரம் நீ  சினிமாவில் நடிக்கப் போறேன்னு விளம்பரம் கொடுத்து, எங்களுக்கும் அம்மாவுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கதே…” என்று சிலர் அட்வைஸ் செய்யவே, கலைத்தாகத்தை அடக்கிக் கொண்டாராம்.  அம்மா வனிதா மீது மிகுந்த பாசம் கொண்ட பாஸ்கரனுக்கு, தாயின் திடீர் மறைவு பேரிடியாய் அமைந்து போனதாம். அதனால், சினிமா கனவை மூட்டைக் கட்டிவிட்டு, குவாரி தொழிலில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.
பிள்ளையார் சுழி போட்ட சுதாகரன்
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன். தன் அக்காள் பிள்ளைகளில் சுதாகரன் மீதுதான் சசிகலாவுக்குக் கொள்ளைப் பிரியம். அந்தப் பிரியம்தான் வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்து எடுக்கக் காரணமாக அமைந்தது.
இந்தியாவே வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக சுதாகரனுக்குத் திருமணம் செய்துவைத்து, அதுவே தேர்தலில் தோல்விக்குக் காரணமாகவே, சுதாகரனை விரட்டியடித்தார் ஜெய லலிதா.
அதன்பிறகு தி.மு.க. ஆட்சியில் ‘சின்ன எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழியை சூட்டிக்கொண்டு ஆடம் பரத்தோடு வலம் வந்தார். 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே சுதாகரனின் தி.நகர் வீட்டிலும் அபிராமபுரத்தில் உள்ள அலுவலத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ் 88 கிராம் ஹெராயினைப் பறிமுதல் செய்து கைது செய்தது. துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு கடுமையாக்கப்பட்டது. 108 நாட்கள் சிறையில் இருந்தார் சுதாகரன். வழக்கு விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.
அதன்பிறகு பெண் திரைப்படத் தயாரிப்பாளர் பிரியா நாயருடன் ஆபாசப் பேச்சு, புலித்தோல் விவகாரம் என்று பல்வேறு விஷயங் களில் சிக்கினர். சிறுதாவூர் நில விவகாரத்தில் தொடர்புடையதாக பேசப்பட்ட பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்திலும் சுதாகரன் பங்குதாரர். சுதாகரன் என்கிற பெயரை ‘சுதாகர்’, ‘விவேக சுதாகர்’ என்றெல்லாம் மாற்றிப் பார்த்தார். ஜெயலலிதா அடுத்தடுத்து வழக்கு களைப் பாய்ச்சிய போதும், அவருக்கு எதிராக சுதாகரன் ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை.
இரண்டு வாரம் முன்பு சுதாகரன் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ஆனபோது, சசிகலா மற்றும் இளவரசிக்கு நடுவில் உட்கார்ந்து பேசியதுதான் இன்றைய சசிகலா பிரச்னைக்கு ஆரம்பம் என்கிறார்கள்!
‘பாஸ்’ என்ற திவாகரன்!
சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் வசிக்கிறார். ஆரம்பத்தில் மன்னார்குடி பந்தலடியில் ‘கிளைமேட்’ என்ற பெயரில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வந்தார். தற்போது செங்கமலத்தாயார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மன்னார்குடியில் நடத்தி வருகிறார். நேரடியாக சசிகலாவிடம் போனில் பேசக்கூடிய ஒருசிலரில் இவரும் ஒருவர்.  டெல்டா மாவட்ட அ.தி.மு.க.வின் அதிகார மையம் என அழைக்கப்படுபவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக மன்னார்குடியில் இருந்து நம்பகமான ஆட்களை அனுப்பி வைத்தார் திவாகரன். அன்று முதல், ஜெ-வின் அபிமானத்துக்கு உரியவர்களில் ஒருவராகிப் போனார். இவரும் கார்டனில் சில காலம் இருந்தார். பின்னர், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், சசிகலா உறவு வட்டாரத்தில் யார் யார் போயஸ் கார்டனில் வலம் வரலாம் என அனுமானிக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் திவாகரன். சென்னைக்குப் போகாமலே காரியம் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர். இவரைக் கட்சிகாரர்கள் ‘பாஸ்’ என அழைப்பார்கள். டெல்டாவில் இவர் கைகாட்டும் நபரே சட்டமன்ற வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்! அதனால் இவரின் வீட்டின் முன் காலையிலேயே அ.தி.மு.க கரை வேட்டிகள் திரண்டு நிற்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இவரின் கையே மேலோங்கி இருந்தது. முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் கொண்ட டெல்டாவில், ஸ்ரீதர் வாண்டையாரின் பிரிவு அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு என கருதப்பட்ட நிலையில், மூ.மு.க-வை உடைத்து வாண்டையாரை கலங்கடித்தவர் திவாகரன். ‘பணக்காரர்களை தன் அருகில் வைத்துக்கொள்வதும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தன்னுடைய விசுவாசிகளுக்கு கட்சிப் பதவி பெற்றுத் தருவதும் திவாகரனின் ராஜதந்திரம்!
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னாள் செயலாளர் எஸ்.காமரஜுக்குத்தான் மன்னார்குடி தொகுதியில் ஸீட் கிடைக்கும் என அனைவரும் நம்பிக் கொண்டு இருந்த சூழலில், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சிவா.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து ஸீட் வாங்கித் தந்தார்.
தனது தீவிர விசுவாசியான ஆர்.காமராஜைத் தொடர்ந்து 15 வருடங்களாக திருவாரூர். மாவட்ட அ.தி.மு.க செயலாளராக நீடிக்க வைத்தவரும் திவாகரனே! அவருக்கு நன்னிலம் தொகுதிக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தவரும் திவாகரன்; அங்கு வெற்றி பெற்ற ஆர்.காமராஜை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக்கியதும் திவாகரனே! சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால், ஆர்.காமராஜ் பதவிக்கு வெடி காத்திருக்கிறது. இருந்தாலும், ‘திரும்பவும் ஒண்ணா சேர்ந்துடுவாங்கப்பா’ என அ.தி.மு.க. கரை வேட்டிகள் கூட்டம் திவாகரன் வீட்டு வாசலில் காத்திருப்பது தொடர்கிறது.!
முதல்வர் உஷா ராகி, மன்னார் குடி வகையறா அத்தனை யையும் வாட்ச் பண்ணுகிறார் என்று தெரியாமல் போனிலும் நேரிலு மாக தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளுடன் எல்லாம் இவர் பாட் டுக்கு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்க… அப்படி பேசியவர்கள் பட்டியலை எல்லாம் தோட்டத்துக்குக் கொடுத்தது உளவுத் துறை. அந்த அதிகாரி கள் நிலைமை என்னாகுமோ, தெரியவில்லை!
‘பிரமாண்டம்’ டாக்டர் வெங்கடேஷ்
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையின் ஆஞ்ச நேயா பிரிண்டர்ஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை நிர்வகித்து வந்தார். அப்போது அவருக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. டாக்டர் தொழிலை சின்சியராகப் பார்க்காவிட்டாலும்,  டயகனஸ்டிக் சென்டர் ஒன்றைத் தனியாக நடத்தி வந்தார். இதன் திறப்பு விழாவுக்கு ஜெயலலிதாவே நேரில் சென்றார்.
தினகரன், மகாதேவன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்ட பிறகு, வெங்கடேஷை உள்ளே கொண்டு வந்தார் சசிகலா. மகாதேவன் வீட்டுக்கு அருகில்தான் வெங்கடேஷ் வீடும் தஞ்சாவூரில் இருந்தது. அண்ணன் தம்பிகளாக பழகி வந்தவர்கள் காலப்போக்கில் எதிரிகளாக மாறியது தனிக்கதை.
மகாதேவன் போன பிறகு தினகரன் மீண்டும் கார்டனில் கால் பதிக்க நினைத்தார். அது நடக்காமல் போனாலும் வெங்க டேஷ§க்கு ஆதரவுக் கரம் நீட்டினார். ஏனென்றால் தினகரனின் மனைவியும் ஜெயா டி.வி-யின் எம்.டி-யுமான அனுராதாவின் சகோதரர்தான் வெங்கடேஷ். இவரது திருமணத்தை நடத்தி வைத்தது, ஜெயலலிதாதான்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று வெங்கடேஷின் கை ஓங்கியது. ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப் பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு மாநில செயலாளராகவும் ஆக்கப்பட்டார். வெங்கடேஷ§க்கு ஆதரவாக தினகரன், அனுராதா, கலியபெருமாள் ஆகியோரின் ஆசியும் கிடைக்கவே மளமளவென உயர்ந்தார். அவருக்குக் கட்சியில் கிடைத்த வரவேற்பு, வேறு யாருக்கும் கிடைக்காத வகையில் படுபிரமாண்டமாக இருந்தது. அதனாலோ என்னமோ இவரும் ஓரம் கட்டப்பட்டார்.  கடந்த சட்டசபைத் தேர்தலில் தனக்கு வேண்டியவர்களுக்கு இடம் வாங்கிக் கொடுப்பதில் இவர் கவனமாக இருந்தார். தனக்குப் பிடிக்காதவர்கள் மீது அவதூறு கிளப்பி ஒழிப்பதில் வெங்கடேஷ் கில்லாடி என்கிறார்கள். அப்படி முடக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைராஜன் எம்.எல்.ஏ.!
ராவணனின் ராஜ்ஜியத்திலே…

‘கெட் லாஸ்ட்’ என்று ஜெயலலிதா விரட்டி அடித்திருக்கும் சசிகலா தலைமையிலான மன்னார்குடி ‘நிறுவனத்தில்’ முக்கியப் புள்ளி ராவணன். கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல அ.தி.மு.க. இவரது பாக்கெட்டில்தான் இருந்தது. ”ராவணன் ராஜ்ஜியம் எப்போது, எப்படி தொடங்கியது?” என்று ஆளுங்கட்சி புள்ளிகளிடம் விசாரித்தோம்.
”சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன் இவர். குடும்ப விஷயங்களில் மிகவும் பற்றுதலாகவும் பண விவகாரங்களில் நேர்மையாகவும் நடந்து கொண்டதால், சசிகலா ஆசிர்வாதத்துடன் மிடாஸ் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்புக்கு வந்தார். அதன்பிறகு நம்பிக்கையான நபராக தோட்டத் துக்குள் நுழைந்தவர்தான் ராவணன். கொடநாடுக்கு ஜெயலலிதா ஓய்வு எடுக்க வந்த நேரங்களில், சிறப்பான உபசரிப்புகள் செய்து குட்புக்கில் இடம் பிடித்தார்.
மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடைய செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட் எடுத்து அம்மாவிடம் ஒப்படைப்பார். இவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, இவர் சொன்னதை அப்படியே அம்மா நம்பினார். அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராவணன், ‘அம்மாவுக்குப் பிடிக்கலை’ என்று சொல்லியே,  தனக்கு ஆகாத ஆட்களை எல்லாம் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். ராவணனைப் பத்தி புகார் எழுதி கார்டனுக்கு அனுப்பினால், அது நேரடியாக ராவணன் கைக்கே வந்துவிடும். புகார் எழுதினவரையே கூப்பிட்டு, அந்தத் தபாலை கையில் கொடுத்து தன்னுடைய பவரை காண்பிப்பார்.
கே.பி.ராமலிங்கம், ஆனந்தன், எடப்பாடி பழனிச் சாமி, தாமோதரன், வேலுமணி ஆகியோரை அமைச்சர் ஆக்கிக் காட்டிய ராவணன், செ.ம.வேலுசாமி, நீலகிரி மாவட்ட முன்னாள் செயலாளரான மறைந்த செல்வராஜ், ஊட்டி நகரச் செயலாளராக இருந்த கோபால கிருஷ்ணன் போன்றவர்களை விரட்டவும் செய்தார். அறிமுகமே இல்லாத புத்திசந்திரன் அமைச்சரானதும், அவர் பதவி பறிபோனதுக்கும் இவர்தான் காரணம். சண்முகவேலுவின் அமைச்சர் பதவி பறிப்பு, மலரவனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு, பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் ஆகமுடியாமல் போனது எல்லாமே ராவணன் மகிமைதான்.
எந்த ஒரு எம்.எல்.ஏ-வும் தன்னுடைய தொகுதிக்கு சுயமா ஒரு திட்டத்தைக் கொடுக்க முடியாது. அத்தனையும் ராவணனோட கவனத்துக்கு வந்து, அவர் சொல்லக்கூடிய கான்ட்ராக்டர் வழியாத்தான் செயல்பாட்டுக்கு போக முடியும்.
சசிகலா டீமில் முதன்முதலில் அம்மாவோட கோபத்துக்கு ஆளானது ராவணன்தான். அம்மா வின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் அத்தனை அமைச்சர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது ராவணனின் பழக்கம். அதில் செங்கோட்டையன் மட்டும் கட்டுப்படாமல் இருந்தார். அதன் விளைவுதான் வேளாண்மைத் துறை அமைச்சராகவும் அதுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் டம்மி யாக்கப்பட்டார்.
அதனால் ராவணன் மீது பெரும் ஆதங்கத்தில் இருந்த செங்கோட்டையனுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அம்மாவிடம் மனம் விட்டுப் பேசும் ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்ததாம். அப்போது, ராவணன் சொத்து விவகாரங்களும் கட்சியில் அவரது பிடியும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டதாம். அதன் விளைவாகத்தான் ராவணன் வெளிநாடு போயிருந்த நேரத்தில், அறிவிக்கப்படாத ரெய்டு அவர் வீட்டில் நடந்தி ருக்கிறது. (இதை அப்போதே கழுகார் பகுதியில் சொல்லி இருந்தோம்!)
கிடைத்த தகவல்களைக் கண்டு அதிர்ந்துபோன அம்மா, ராவணனையும் சசியையும் அழைத்து இது பற்றி விசாரணை நடத்தினார்.  சசிகலா தலை குனிந்து அமைதியாக நிற்க, ராவணன் ஏதோ விளக்கம் கொடுக்க முன் வந்தாராம். உடனே டென்ஷனான அம்மா, ‘ போன ஆட்சியில மணல் எடுத்தவனே இப்பவும் பிசினஸ் பண்றான். கேட்டா, ‘ராவணன் சாருக்கு தெரியும்னு’னு பதில் வருது. என்ன நடக்குது?’னு சீறியிருக்காங்க. அப்பவே ராவணனுக்கு நிலைமை புரிஞ்சுடுச்சாம். இப்போ நடந்திருக்கிறது நல்ல விஷயம். ஆனா, அவர் ரீ-என்ட்ரி ஆகாம இருந்தாத்தான் கட்சிக்காரங்க சந்தோஷம் நிலைக்கும்” என்று சொன்னார்கள்.
உஷார் ராமச்சந்திரன்…
எம்.நடராஜனின் சகோதரர்தான் எம்.ராமச் சந்திரன். ‘சசிகலா போயஸ் கார்டனில் இருந்தாலும் கணவர் நடராஜனோடு தொடர்பில்தான் இருந்தார். அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையே தூதுவர் இவர்தான்’ என்கிறார்கள்.
கார்டனுக்குள் அவர் கால் பதித்ததும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் தரும் மனுவைப் பரிசீலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா கொடநாடு தங்குவதாக இருந்தால், ஒரு வாரத்துக்கு முன்னரே போய் தயார் செய்வது இவர் பணி.
சென்னை மயிலாப்பூர் ராஜரா ஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு எதிரே இருக்கும் ஜே.பி. அவென்யூவில்தான் ராமசந்திரனுக்கு வீடு. அந்த அப்பார்ட்மெண்டில் தனக்காக தனியாக ஒரு லிப்ஃட் அமைத்திருந்தார் ராமச்சந்திரன். அந்த லிப்டில் யார் ஏறினாலும் அது ராமச்சந்திரன் வீடு இருக்கும் ஃபுளோரில்தான் நிற்கும். வெளிநாடுகளில் இருப்பது போலவே, லிப்ஃட்டைப் பயன்படுத்த ஆக்சஸ் கார்டு அமல்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு டெக்னிக்கல் திறமையும், உஷார்தனமும் நிரம்பியவர்.
கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு போன்றவற்றில் ராமச்சந்திரன் கை ஓங்கியிருந்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருக்கும் போதே தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியல் வெளியான விவகாரத்துக்குப் பின்னாலும் இவருடைய கைங்கரியம் இருந்ததாம். எம்.நடராஜனை எப்படி ‘எம்.என்’ என்று அழைக்கிறார்களோ அது போல ராமச்சந்திரனை அ.தி.மு.க-வினர் ‘எம்.ஆர்’ என்றுதான் விளிக்கிறார்கள்.
‘கார்டன் மாப்பிள்ளை’ ராஜராஜன்

1990-வாக்கில் இளவரசியின் கணவர் ஜெயராமன் ஹைதரா பாத்தில் பங்களா கட்டும் பணியை மேற்பார்வையிடும்போது மின்சாரம் தாக்கி இறந்தார். அதன்பிறகு, இளவரசி, அவரது இரண்டு மகள், ஒரு மகனுக்கும் ஜெயலலிதாதான் ஆதரவாக இருந்தார். போயஸ் கார்ட னிலேயே வளர்ந்த இளவரசியின் இரண்டாவது மகள் சகீலாவை 2001-ம் ஆண்டு சமயபுரம் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டவர்தான், ராஜராஜன். தஞ்சை மாவட்டம், நடுக்காவேரி என்கிற ஊரைச் சேர்ந்த பழனிராஜன் என்பவரின் இரண்டாவது மகன். சிவந்த நிறம். கூலிங் கிளாஸ். குறுந்தாடி இவை மூன்றும்தான் அவரது அடையாளம்.
திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூர் சென்று தொழில் செய்து வந்த ராஜராஜன், கடந்த ஒரு வருடம் முன்புதான் சென்னைக்குத் திரும்பினார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓடியாடி வேலை செய்த நேரத்தில் கட்சியினருக்கு அறிமுகம். திருச்சி மேற்கு இடைத்தேர்தல் நடந்தபோது, தலைக்கு 15 லட்சம் வீதம் மந்திரிகளிடம் வசூல் பண்ணி நிலைமையை சமாளித்து, வெற்றிக் கொடி கட்டியதால் போயஸ் கார்டனில் பவர்ஃபுல் மனிதராகிப் போனார். சமீபத்தில், பெங்களூரு கோர்ட்டுக்கு சசிகலா, இளவரசி சென்ற நேரத்தில் இவர்தான் ஒத்தாசைக்குச் சென்றார். தி.நகர் பத்மநாபா தெருவில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார்.
தடாலடி மகாதேவன்
‘இவரைப் புரிஞ்சுக்கவே முடிய லப்பா!’ எனக் கட்சிக்காரர்களையே புலம்ப வைப்பவர் மகாதேவன். சசிகலாவின் அண்ணன் விநோதகன் மகன்தான் இவர்.  ”தன்னைப் பார்க்க வருபவர்கள் முன் துப்பாக்கி வைத்து பேசுவது, வீட்டிற்கு வருபவர்கள் கால் கழுவி விட்டுத்தான் உள்ளே வர வேண்டும் என சொல்வது என இவரின் தடாலடி குறும்புகள் அதிகம்” என்கிறார்கள் இவரைச் சந்தித்துத் திரும்பியவர்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்  போயஸ் கார்டனில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஆடிட்டர் ஒருவர் தாக்கப்பட்ட  சம்பவமே அவரது தைரியத்துக்கு சாட்சி என்பார்கள் மன்னார்குடி ஆட்கள். அதிரடி சேட்டைகள் அதிகமாகவே போயஸில் இருந்து துரத்தப்பட்டார். ‘இனி கட்சிக்காரர்கள் யாரும் மகாதேவ னோடு தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஆனால், அதைப்பற்றி மகாதேவனும் கவலைப்படவில்லை. கட்சிக்காரர்களும் கண்டுகொள்ள வில்லை. ‘எனக்கு சசி அத்தை துணை இருக்கிறார்’ என சொல்லிக் கொண்டிருந்தார். அதுபோலவே, அடுத்த சில வருடங்களிலேயே ஜெ. பேரவைக்கு மாநிலச் செயலாளர் ஆனார்.
தஞ்சாவூரில் விநோதகன் மருத்துவ மனை, டி.வி.எம். பேருந்துகள்.. ஆகியவை இவருக்கு சொந்தமான உள்ளன. அதிக ஆன்மீக ஈடுபாடு உண்டு. நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கிறார். யாருமே இவரை எளிதில் அணுக முடியாது. எப்போதாவது சென்னைக்குச் சென்று சசிகலாவைச் சந்திப்பது உண்டு. திவாகரனுக்கு அடுத்து தஞ்சாவூரில் செல்வாக்குடன் இருப்பவர். இவருக்கும் தமிழக நகர்புறம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் ஆகாது. அதனால் அவருக்கு ஏதாவது குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார் என்கிறார்கள். தஞ்சாவூர் நகராட்சித் தேர்தலில் தன் ஆதரவாளர்கள் சிலருக்குக் கவுன்சிலர் சீட் வாங்கிகொடுத்ததோடு, நிறுத்திக் கொண்டார். இப்போதைய அ.தி.மு.க ஆட்சியில், அடக்கியே வாசித்து வருகிறார். ‘கட்சிப் பொறுப்பு களுக்கோ, டெண்டர் விஷயமாகவோ இங்கே யாரும் வரவேண்டாம்’ எனச் சொல்லி இருந்தாராம். தன்னுடைய தம்பி தங்கமணியையும் அடக்கி வாசிக்கச் சொல்லி இருக்கிறார். அதனால்தான், முதலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டிய லில் மகாதேவன் பெயர் இல்லை. என்ன நடந்ததோ அடுத்த சில மணி நேரத்தில் மகாதேவன், தங்கமணி பெயரும் பட்டியலில் இடம் பெற்றது.
தலைகாட்டாத   கலியபெருமாள்
அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத மத்திய மண்டலப் பொறுப்பாளராக இயங்கிக் கொண்டிருந்தவர் கலிய பெருமாள். இவர், சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தி. திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசிக்கும் இவர், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர். திருச்சியில் முக்கியப் பதவிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பலரும் இவரது சிபாரின் பேரில் உச்சத்துக்கு வந்தவர்கள்தானாம்.
கலியபெருமாள் பொது இடங்களில் அதிகம் தென்படுவது இல்லை. அதேபோலவே தனது வீட்டுக்கு கட்சிக்கொடி தாங்கிய வாகனங்கள், கரை வேட்டி, துண்டு அணிந்த நபர்கள் வருவதையும் விரும்ப மாட்டார். நம்பிக்கையான போலீஸ் அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது, அவர்களுக்கு வருமானம் வரும் வழிகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் பணிகளை கச்சிதமாகச் செய்து வந்தாராம்.
தடாலடி தங்கமணி
சசிகலாவுடன் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் கடைசி இடம் பிடித்தவர் தங்கமணி. சசிகலாவின் அண்ணன் விநோதகனின் இளைய மகன். மகாதேவனின் தம்பி. தஞ்சாவூரில் தன் அம்மாவுடன் வசித்து வரும் தங்கமணி, இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கட்சி ஆட்களுடன் உலா போவது, நேரடியாக கட்சி விவகாரத்தில் தலையிடுவது ஆகியவை இவருக்குப் பிடிப்பது இல்லை. தஞ்சாவூர் பகுதிகளில் தன் முன்னால் கொண்டுவரப்படும் பஞ்சாயத்துகளை மட்டும் செய்து, தன் தடாலடி அதிகாரத்தைக் காட்டிக்கொள்வார். இந்த முறை அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், ‘எங்கே தங்கமணி?’ என கட்சிக்காரர்களே கேட்கும் அளவுக்கு பதுங்கித்தான் இருந்தார். சசிகலா புயலில் இவரும் சிக்கி, வெளியே தள்ளப்பட்டு விட்டார்.
‘பாதுகாப்பு’ பழனிவேலு
நடராஜனின்  சகோதரர்தான் பழனிவேலு. சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்ட 4வது நாள், பழனிவேலுவையும் கட்டம் கட்டினார் ஜெயலலிதா. போலீஸ் துறையில் வேலை பார்த்த பழனிவேலுவை, 1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும், அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டார். இதன் பிறகே இவர் மீது வெளிச்சம் படர்ந்தது. அதன்பிறகு இவருடைய நடவடிக்கை வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், உள்ளுக்குள்ளே காய்களை நகர்த்தி வந்தாராம். எம்.என்., எம்.ஆர். போல இவரை ‘எம்.பி.’ என்றே அழைக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
மர்ம மோகன்!
சசிகலா குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மிடாஸ் நிறுவனத்துக்கும், ‘மிடாஸ்’ மோகனுக்கும் என்ன தொடர்பு என்று ஆதாரங்களைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்காது. ஆனால், அடைமொழியில் மட்டும் மிடாஸ் இருக்கும். எந்த ஒரு விவகாரமானாலும், திரைமறைவில்தான் இயங்குவார். சசிகலாவின் உறவு முறைக்குள் வராதவர். மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் வேறு ஒரு சமுதாயத்தவர். இவரை, ‘அடையார்’ மோகன் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள்.
தென் சென்னையில் சுமார் 45 பார்கள் நடப்பது இவர் கண் அசைவில்தான். எந்த விவகாரமானலும், மிடாஸ் மோகனின் வலது, இடது கரங்களாக விளங் கும் இருவர்தான் தலையிடுவார்கள். வலதுகரம் –  வடபழனி பஸ் நிலையம் எதிரில் ஒரு ஆபீஸ் நடத்தி வருகிறார். டவுன் பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தவர் இன்று விமானத்தில் பறக்கிறார். ஒரு முறை சசிகலா தன்னிடம் இருந்த ஃபோர்டு ஐகான் காரை இவருக்கு விற்றார். அ.தி.மு.க. பிரமுர்களிடம் அந்தக் காரை காட்டி, ‘சின்னம்மாவே எனக்குக் கொடுத்தார்’ என்று பிளேட்டை மாற்றி தனது இமேஜை உயர்த்திக்கொண்டவர். அரசு வக்கீல் நியமனம், போலீஸ் டிரான்ஸ்ஃபர், கட்சிப் பதவி, உள்ளாட்சிப் பதவி என்று ஒவ்வொன்றுக்கும் இவரது தலையீடு உண்டாம்.
‘மிடாஸ்’ மோகனின் இடதுகரம் – முன்னாள் அமைச்சரின் பி.ஏ. ஒருவராம்.  அரசாங்க ஃபைல்களை நுணுக்கமாக டீல் பண்ணும் விஷயத்தில் படு கில்லாடி. தற்போதைய மந்திரி களில் மூன்று பேர்களுக்கு அறிவிக்கப்படாத பி.ஏ-வாக இவர் செயல்படுகிறார். கடந்த சில மாதங்களாகவே ‘மிடாஸ்’ மோகன் மற்றும் அவரது வலது, இடதுகளின் செயல்பாடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றனவாம்.
 கில்லாடி குலோத்துங்கன்
‘மிடாஸ்’ நிறுவனத்தின் உயர் அதிகாரி. எம். நடராஜனின் சகோதரி மகன் இவர்.  தற்போது தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்காக சுமார் 10 மதுபான தொழிற்சாலைகளிடம் இருந்து சரக்குகளை வாங்குகின்றனர். இதில் நம்பர் 1 மிடாஸ் நிறுவனம்தான். இப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் வாங்கிய கொள்முதல் வழக்கத்தைவிட கன்னாபின்னாவென்று அதிகமாம். இதனால் மற்ற நிறுவனங்கள் அடைந்த வயிற்றெரிச்சல் கொஞ் சநஞ்சமல்ல என்கிறார்கள். தன்னை மறைத்துக் கொண்டு வேலை செய்வதில் பலே கில்லாடியாம்.

இதய தெய்வம் M.G.R. 24 ம் ஆண்டு நினைவு அஞ்சலி

24/12/2011பட்டி மன்றமா? வெட்டி மன்றமா?

23/12/2011

பருப்பில்லாத பண்டிகைகூட சாத்தியம்தாம்! ஆனால், டீ.வியில் பட்டிமன்றம் இல்லாத பண்டிகை தினங்கள்? சான்ஸே இல்லை! வரவர…. அந்தப் பட்டிமன்றங்களும், பெரும்பாலும் வெட்டிப் பேச்சு, செட்டப் ஜோக்குகள் என அரைச்சமாவாகவே ஆகிப்போச்சு” என முணுமுணுப்போரும் உள்ளனர்தான்.
நிஜத்தைச் சொல்லுங்க. இன்றைக்கு, பட்டிமன்றங்கள் எல்லாம் வெட்டி மன்றங்களாகிவிட்டது உண்மைதானா?” என்று சில பட்டிமன்றப் பேச்சாளர்களிடம் கேட்டு ஓசியில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியையே வழங்கி விட்டோம். ப்ளீஸ்… என்ஜாய்!

பாரதி பாஸ்கர்

‘பட்டிமன்றம்’ என்பது ஒரு பாரம் பரியமான கலை. நமது பக்தி மற்றும் சங்க இலக்கியங்களில் எல்லாம் கூட பட்டிமன்றத்திற் கான குறிப்புக்கள் இருக்கின்றன. பட்டிமன்றங்களில், எவ்வளவோ கருத்தாழமிக்க விஷயங்கள் அலசப்படுகின்றன. ஒரு பட்டிமன்றத்தில், எதிரணியில் இருப்பவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதே தெரியாது. உடனடியாக எதிர் வாதம் செய்யக் கூடிய திறமை இருந்தால் மட்டுமே பட்டி மன்றங்களில் பேச முடியும். அப்படி எந்த விதமான முன் தயாரிப்புமே இல்லாமல், பேசுவது என்பதே எவ்வளவு அற்புதமான கலை.

டி.வி.யில் நடைபெறும் பட்டிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பவர்களிடம் சென்று, நாளை ஒரு பட்டிமன்றத்தில் பேச உங்களுக்கு வாய்ப்புள்ளது! அது இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும்” எனச் சொல்லிப் பாருங்கள். நான் வரேன்” என போட்டிப் போட்டுக் கொண்டு ஓடி வருவார்கள். பட்டிமன்றத்தின் வலிமை அத்தகையது. இது காலத்தால் என்றுமே அழிக்க முடியாத கலை வடிவம். அது நிச்சயம் என்றுமே வெட்டி மன்றம் ஆகாது.

கு.ஞானசம்பந்தம்

முதலில் வெட்டிமன்றம் என்ற சொல் இதில் வருவதே தவறு. ஒரு வேளை பட்டி மன்றங்களில்ஒரே கருத்தை பேச்சா ளர்கள் வெட்டியும், ஒட்டியும் பேசுவதால் இப்படி ஒரு தலைப்பு வருகிறதா?

1,800 வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டோடு, தமிழ் மக்களோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் கலையை எப்படி வெட்டிமன்றம் என்று கூற முடியும்? இந்திய மொழிகளில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு நம் மொழிக்கு உண்டு. ஆம், தமிழ் மொழியில் மட்டும் தான் பட்டிமன்றங்கள் நடக்கின்றன. சங்க இலக்கியங்களின் சாரம்சத்தை, பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் எளியதொரு சாதனம்தான் பட்டி மன்றம். இதில் வெட்டிமன்றம் என்ற ஒரு சொல் எழுவதை கேட்கவே ரொம்ப கவலை அளிக்கிறது. தமிழ் இருக்கும் வரை பட்டிமன்றங்கள் நின்று, நிலைத்து, நீடித்து வாழும் என்பதில் சந் தேகமே இல்லை.

புதுக்கோட்டை ரா.சம்பத்குமார்

பட்டிமன்றங்களில் பொதுவாகப் பேச கூடிய தலைப்புக்கள் என்பது பக்தி, சமுதாயம், குடும்பம், இலக்கியம், திரை என ஐந்து வகையாக இருக்கும். இந்த அவசர உலகத்தில், எதையுமே முழுதாகப் படித்து தெரிந்து கொள்ளவோ, நின்று நிதானித்து அறிந்து கொள்ளவோ இயலாத ஒரு நிலை. நம் ஐம்பெருங் காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என எல்லாவற்றையும் ஒரு காப்ஸ்யூல் போல, இலக்கியத்தின் சாரங் களை காப்ஸ்யூல் போல பேச்சாளர்கள் பட்டிமன்றங்களின் வாயிலாகக் கொடுத்து வருகிறோம். மொழி, கலாசாரம், பண்பாடு கலந்த ஒரு விஷயம் தான் பட்டிமன்றம். அறிவின் முதிர்ச்சி அது.

அந்தக் காலத்தில் மன்னர்கள் கூட போர் தொடுக்கச் செல்வதற்கு முன், நன்மந்திரி, துன் மந்திரி என இரு வேறு மந்திரி களிடம் கருத்துக்களைக் கேட்பாராம். தாராளமாகப் போகலாம்” என நன் மந்திரியும், உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படும்” என துன்மந்திரியும் சோல்வார்களாம். பட்டிமன்றம் என்பது அக்காலந்தொட்டே இருந்து வருகிறது.. நல்ல அறிஞர்கள் ஒன்று சேர்ந்து அறிவைப் பரிமாறிக் கொள்ளும் மன்றமே பட்டிமன்றம்.

வெட்டி மன்றமே

அண்ணா சிங்காரவேலு

பட்டிமன்ற பேச்சாளர்கள் பெரும்பாலும் கற்பனைப் பறவைகளாகவே இருக்கிறார்கள். ஜோடனைகளும், துணுக்குத் தோர ணங்களும் மட்டுமே பல பட்டிமன்றங்களில் பிரதானமாக, பிரமாதமாக, இடம் பெறுகிறது. ‘புலி வந்துச்சா, அது அப்பறமா சாப்டுச்சு, இப்படிப் பேசிச்சு’ என இல்லாத ஒன்றை காட்டி உதாரணங்களை அடுக்குவது தான் இன்று அரங்கேறி கொண்டிருக்கிறது. புராணங்களையும், இதிகாசங்களையும் மட்டுமே பேசி, அதை யதார்த்த வாழ்க் கையோடு இணைந்து பேசாதவரை பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களே. வெற்று நகைச்சுவையை அள்ளித் தெளிக்க பட்டிமன்றங்களைப் பயன்படுத்தக்கூடாது. அன்பு, பாசம், காதல், என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி மக்களின் நிஜமான பிரச்னைகளைப் பற்றி அலசாதவரை பட்டி மன்றங்கள் நிச்சயம் வெட்டி மன்றங்களே!

புதுக்கோட்டை பாரதி பாபு

‘ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ங்கற இந்த வரிகள் ‘மணி மேகலை’ல வரும். அதாவது, ஒரு விஷயத் தைப் பற்றி வாதிடும் போது, எதைப் பேசணும் எதை பேசக் கூடாது என ஒரு வரை முறை இருக்கிறது. பேச வேண்டியதைப் பேசாமல் இருந்துவிட்டு, பேசக் கூடாததை பேசுவதால் தான் பல பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறி விடுகின்றன.

பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில், முழுக்க முழுக்க நகைச்சுவையா பேசுங்க போதும் என்பவர்களும் உண்டு, அப்படி அங்கே பொருட்சுவை இல்லாமல் வெறும் நகைச்சுவை மட்டுமே இருந்தால் அது எப்படி நல்ல பட்டிமன்றமாக இருக்க முடியும்? சிந்தனையற்ற சிரிப்பு என்பது உயிரற்ற உடல் போன்றது. மொக்கை ஜோக்ஸ் நிறையத் தேவை” என சிலர் கட்டாயப்படுத்துவதால், பல பட்டி மன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டியது நம் கைகளில் தான் இருக்கிறது.

எல். சிவா

இன்றைய பட்டிமன்றங்களில் நகைச்சுவை என்கிற பேரில் கோமாளித்தனம்தான் அரங்கேறி வருகின்றது. மக்களை எப்பாடு பட்டாவது சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, ஒருவரை ஒருவர் கீழ்த்தரமாக விமர்சனம் செது கொள்வது சகிக்க முடியாதது. நகைச் சுவை சீரியஸாகவும், சீரியஸான சிந்தனை கள் நகைச்சுவை போலவும் இன்று பட்டிமன்றங்களில் பேசப்படுகின்றன. இது எப்படி இருக்கிற தென்றால், ஸ்ருதி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், பாட்டு பாடுவது போல ஆகிவிட்டது. சந்தேகமே இல்லாமல், பட்டிமன்றங்கள் வெட்டிமன்றங்களே..

நடுவர் தீர்ப்பு : வெற்றி மன்றமே

நடுவர்: ஷாந்தி சிவராம்

இரு அணியின் வாதங்களையும் சுவைப்பட படிச்சு முடிச்சாச்சு. எல்லாம் சரி, பட்டிமன்றங்களைப் பற்றிய தீர்ப்பை ‘ டீ.வி. பட்டிமன்ற ரசிகையான ஷாந்தி சிவராமின் வீட்டுக் கதவைத் தட்டி னோம்! டீ.வி.யில் புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பான பட்டிமன்ற நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தவர், அதற்கு ஒரு பாஸ் கொடுத்து விட்டு, என்னது பட்டி மன்றங்கள், வெட்டிமன்றங்களா… அது எப்படி அப்படிச் சொல்லலாம்? ஒவ்வொரு பட்டிமன்றத்துலேயும் பாருங்க, எவ்வளவு பொது அறிவை சார்ந்த விஷயங்களைச் பேசறாங்கன்னு… ஒரு பண்டிகை, விழான்னு வந்தா டீ.வி.ல தமிழே தெரியாத நடிகைகளின் பேட்டிகளைப் பார்த்து ரசிப் பதை விட சூப்பரான பட்டிமன்றங்களை ரசிக்கலாம்… குடும்பத்தை சந்தோஷமா நடத்துவதற்கான எத்தனையோ நல்ல நல்ல டிப்ஸ்கள் பட்டி மன்றத்துல கிடைக் குதே…” என பட்டிமன்றங்களின் நற்பலன்களை எடுத்துக் கூறினார். மேலும், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்கள் வெரைட்டி யான வெற்றிமன்றங்களே தவிர, வெற்று மன்றங்களோ வெட்டி மன்றங்களோ கிடையவே கிடையாது என அடித்து (அட, ரிமோட்டதாங்க) கூறி விடை கொடுத்தார்.

நன்றி..மங்கையர் மலர்

முக்தி தரும் புரட்டாசி சனி விரதம்.

24/09/2011

அற்புதம் நிகழ்த்தும் முருகன் திருமேனி

15/08/2011


படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் `படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா’ என்று முருகப்பெருமான் கேட்டார்.

இந்த கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவருடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். மேலும் பிரம்மனை சிறையில் அடைக்கவும் செய்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார்.

பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் முறையிட்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சிவபெருமானும் முருகப்பெருமானிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற… தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இணங்க பிரம்மாவை விடுதலை செய்தார். இதை பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டார். முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார்.

இந்த அற்புத நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிமலை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடாக இந்த திருத்தலம் திகழ்கிறது.

இங்குள்ள முருகப்பெருமானின் திருமேனியில் நாளும் அதிசயம் நிகழ்வதைப் பார்க்கலாம். அதாவது, அபிஷேகம் செய்யும்போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருகிறார்.

மேலும், இக்கோவில் கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

ஜாபருக்கு ஆப்பு. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

26/07/2011

ஏடிஜிபி ஜாபர்சேட் மற்றும் முன்னாள் முதல்வரின் உதவியாளர் வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். தமிழக உளவுத் துறை ஏடிஜிபியாக இருந்தவர் ஜாபர்சேட். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரது மனைவி பர்வீன் மற்றும் முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் ராஜா சங்கரின் பெயரில், பெசன்ட் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நிலம் வாங்கி உள்ளனர்.

இதை ‘சமூக சேவகர்கள்’ என்ற கோட்டா அடிப்படையில் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஐ.ஜி. குணசீலன் உத்தரவின்படி, எஸ்.பி.க்கள் துரைக்குமார், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் இன்று காலை பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கூடுதல் எஸ்.பி.க்கள் ஜெயலட்சுமி, சுப்பையா ஆகியோர் தலைமையில் அண்ணாநகர் ‘ஆர்’ பிளாக்கில் உள்ள ஜாபர்சேட் வீட்டில் ரெய்டு நடந்தது. திருவல்லிக்கேணியில் உள்ள ஐ.ஜி. குடியிருப்பில் ஜாபர்சேட் வசிக்கும் வீடு, கொட்டிவாக்கத்தில் உள்ள வீடு மற்றும் ராஜமாணிக்கத்தின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீடு, பெசன்ட் நகரில் அவர்கள் கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கீழ்பாக்கத்தில் உள்ள பத்மா என்பவரின் வீடு உள்பட பல இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஜாபர்சேட்டின் மகளுக்கு சமூக சேவகி சான்றிதழ் கொடுத்த ஆவணம் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஜாபர்சேட் வீட்டில் சோதனை நடத்தும் விஜிலன்ஸ் டீமில் முக்கியமானவர் கூடுதல் எஸ்பி ஜெயலட்சுமி. இவர், இதற்கு முன்பு ஜாபர்சேட்டுடன் உளவுத்துறையில் பணியாற்றினார். கடந்த ஆட்சியில், மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தாகரத்தை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றிய தகவல் உளவுத்துறை மூலம் சரியான நேரத்தில் அப்போதைய முதல்வருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கூடுதல் எஸ்.பி. ஜெயலட்சுமியை ஜாபர்சேட் திட்டியிருக்கிறார். அதிகாரிகள் பலர் முன்னிலையில் தன்னை ஜாபர்சேட் திட்டியது பற்றி அப்போதே பலரிடம் வருத்தப்பட்டிருக்கிறார் ஜெயலட்சுமி. இன்று ஜாபர்சேட் வீட்டில் ரெய்டுக்காக கிளம்பிய டீமுடன், தானாகவே முன்வந்து அவரும் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது. ரெய்டு நடந்த போது, டீமில் இருந்த அதிகாரிகளுக்கு பல முக்கிய தகவல்களை சொல்லி ஜெயலட்சுமி உதவியதாக கூறப்படுகிறது.

 

காங்.கூட்டணியா?ஜெ.ஜெ.அதிரடி பேட்டி.

28/06/2011

டைம்ஸ் நவ்’ செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு  தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா அளித்த விரிவான பேட்டி.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி இந்த அளவுக்கு வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?

தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தேன். 200 இடங்களுக்கு குறையாமல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தேன். 203 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

கடந்த ஆண்டு நவம்பரில் தேவைப்பட்டால் மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தயார் என்று அறிவித்தீர்கள். அதை இப்போது எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?

கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் இருந்த அரசியல் சூழல் வேறுவிதமானது. அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. 2ஜி விவகாரத்தின் காரணமாக, மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

அப்போது நான் ஆதரவு அளிக்கிறேன் என்று சொன்னேன். அதனை பரிசீலிக்காதது ஏன் என்று காங்கிரஸிடம் தான் கேட்க வேண்டும். இப்போது காட்சிகள் அனைத்தும் மாறிவிட்டன. இதன்பிறகு அதுபோன்ற சூழலுக்கே இடமில்லை.

மாநில கட்சிகளுடன் கூட்டணி அரசியல் என்பது தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது என கருதுகிறீர்களா?

இதை அனுமானிப்பதற்கு நான் ஜோதிடர் இல்லை. ஆனால், தனிப்பெரும்பான்மை ஆட்சி என்ற காலம் முடிந்துவிட்டது. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சி தான் நீடிக்கும். தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் முழுமையான திறனில்லை என்றே நினைக்கிறேன்.

மத்தியில் 2014-க்கு முன்பு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதா? உங்களது நிலைப்பாடு…

நான் முதல்வராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் தான் ஆகின்றன. எதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

எந்தநேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இதுதான் நடக்கும் சொல்ல முடியாது. அதேவேளையில், நாம் எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும். இதுபற்றி விவரிக்க விரும்பவில்லை.

உங்கள் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அண்மையில் உங்களை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். பிஜேபியின் முக்கியத் தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக பேச்சு எழுகிறது. பிஜேபியுடன் இணைந்து செயலாற்றுவதில் உங்களுக்கு தயக்கம் இல்லை என்றே தெரிகிறது… 

கடந்த 2002-ல் மோடி பதவியேற்பில் நான் கலந்துகொண்டேன். அதையொட்டியே அவரும் எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமல்ல.. டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் எனது நெருங்கிய நண்பர் தான். ரவிஷங்கர் பிரசாத்தும் எனது நண்பராக இருக்கிறார்.

நரேந்திர மோடியும், சுஷ்மா ஸ்வராஜும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்களது ஆதரவு என்பது மிகவும் அவசியம் என்ற கருத்தும் உள்ளது…

எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதைப் போல் தான் பிஜேபியுலும். காங்கிரஸ் கட்சியில் கூட நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைச் சந்தித்தோ அல்லது தொலைபேசியிலோ பேசுகிறார்கள்.

நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்.

மத்தியில் மூன்றாவது அணி குறித்து…

அரசியலில் எதுவும் நிகழலாம். குறிப்பாக, இந்திய அரசியல் எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நிகழலாம். எனவே, எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் காத்திருப்பதே நல்லது. அதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளது.

நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வலுவான மத்திய அரசே அவர்களது தேவை. ஊழலற்ற நிலையும், பாதுகாப்பான சூழலுமே முக்கியம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பற்றி…

ஊழல் புகாரில் சிக்கிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆனது. அதேபோல், கனிமொழி மீதும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டது. தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஊழல் அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை நாடே எதிர்பார்க்கிறது.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரும் இருக்க வேண்டும் என்பதில் நிலவும் மாறுபட்ட கருத்துகளில் உங்களது நிலைப்பாடு…

லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும்.

இந்தச் சூழலில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும்.

மேலும், அரசுக்கு நிகரான அமைப்பு உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது.

ஆயினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.

தேசிய அளவிலான அரசியலில் ஈடுபடும் விருப்பம்…

அதுபோன்ற விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அதுவரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்வர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.

உங்களது இலக்கு…

இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசப்பற்று கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.

தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி?

18/06/2011

லைஞர் கருணாநிதி திருந்துவதாகவோ தம் தவறுகளை உணர்வதாகவோ தெரியவில்லை. தோல்விக்குப் பின் தமக்கு மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னவர், அந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல், மறுபடியும் அறிக்கைகள், பேச்சுகள் என்று பழையபடியே தம் தவறுகளுக்கு சுண்ணாம்படிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார். தி.மு.க.தான் படுதோல்வியடைந்து விட்டதே, கருணாநிதிதான் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டாரே, ஏன் தொடர்ந்து அவர்களைப் பற்றி இன்னமும் எழுதவேண்டும் என்று சில நண்பர்கள் கேட்டார்கள். எழுத சில காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா எடுக்கும் சில நடவடிக்கைகள் பற்றிய சர்ச்சைகள், விமர்சனங்கள், தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து தப்பு செய்துவிட்டார்கள் என்ற ஒரு கருத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஜெயலலிதாவின் தவறுகளை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம், தி.மு.க ஆட்சியின் அராஜகங்களை, முறை கேடுகளை நியாயப்படுத்திவிட முடியாது. அவற்றுக்கான தண்டனை தேர்தல் தோல்வி மட்டுமல்ல; ஊழலும் முறைகேடும் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாவது காரணம், தி.மு.க. என்ற கட்சி அடியோடு அழிந்துபோவதில் எனக்கு உடன்பாடில்லை.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாகவேண்டுமென்பதும், அது திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காந்திய இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களின் சிறந்த கூறுகளின் கலப்பாக அமைய வேண்டுமென்பதும் என் கனவுகளில் ஒன்று. ஆனால் அப்படி ஒன்று நிகழ்வதற்கான சமூகக் காரணங்கள் கனிவதற்கும் கனிந்து வரும் வரையிலும், தி.மு.க. என்ற கட்சி புதுப்பிக்கப்பட வேண்டும். தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு பிரதானமான காரணம் கருணாநிதி தம் குடும்பங்களின் சுயநலத்தை முன்னிறுத்தி அதற்கேற்ப கட்சியை வடிவமைத்துக் கொண்டார். தம் குடும்பம் போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தம்மை அண்டிப் பிழைக்கும் ஒரு பிரமுகரின் குடும்பம் பாளையக்காரராக ஆட்சி செய்யும் முறையை அவர்தான் வலுப்படுத்திப் பாதுகாத்தார். இதையெல்லாம் மறைப்பதற்கான முகமூடியாக தமிழ், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றைத் தம் முழுத்திறமையுடன் பயன்படுத்தி வந்தார் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டது.

இனி தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு அது குறைந்தபட்சம் அண்ணா காலத்து தி.மு.கழகமாகவேனும் ஆகவேண்டுமானால், கருணாநிதி உருவாக்கிய குடும்ப அரசியல் கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும். அதற்கான சூழல் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது. டெலி ஃபோன் நிலையத்தையே டி.வி.க்காக பயன்படுத்தியது போன்ற கருணாநிதி குடும்பத்தினரின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து, ஒவ்வொருவராக சிறை நோக்கி நெடிய பயணம் தொடங்குகிறார்கள். அவரது பாளையக்காரக் குடும்பங்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. அடுத்து அவர்கள் மீதும் நிலப்பறி, மணற்கொள்ளை போன்ற பல குற்றங்களுக்காக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதானால், இன்று தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டுமானால் கருணாநிதியைக் கட்சியிலிருந்து விலகியிருக்கச் சொல்லக் கூடிய அளவு உட்கட்சி ஜனநாயகம் மறுபடியும் ஏற்பட்டால்தான் முடியும். ஆனால், அவரோ தொடர்ந்து தம் வார்த்தை விளையாட்டுகள், பேச்சுத்திறமை போன்றவற்றின் மூலம் எஞ்சியிருக்கக்கூடிய தொண்டர்களை ஏமாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். அதற்கான அடையாளம்தான் திருவாரூர் நன்றியுரை. அதில் அவர் சொல்லிய ஒவ்வொரு கருத்தையும் மயக்கமின்றி கேள்வி கேட்டால் தான் உண்மையான திராவிட இயக்கத் தொண்டனால் தி.மு.க.வைக் காப்பாற்ற முடியும்.

அந்த உரையில் கருணாநிதி சொல்கிறார்: “என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ, அல்லது வேறு காரணத்தாலோ, சிறையில் உள்ளார்.” தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “தலைவா, அப்படின்னா, மத்திய அரசுல ஏன் இன்னமும் தி.மு.க. ஆட்சியில இருக்குது? அரசு அலட்சியம்னா ஏன் எதிர்த்துப் பதவி விலகாம இருக்காங்க? வேற காரணம்ன்னா என்ன? நீராராடியாவோட கனி பேசின பேச்சுல அவுட் ஆன சமாச்சாரமா? ராசா, கனி,டெலிகாம் அதிகாரிங்க, கம்பெனி நிர்வாகிங்க அல்லாரும் உள்ள இருக்கறதுக்கு சுப்ரீம் கோர்ட்டோட கண்டிப்புதானே காரணம், தலைவா?”

அடுத்து, கருணாநிதி, கட்சியினரின் அனுதாப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்காகச் சொல்கிறார்: “திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.” தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே? தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க.

அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க. ‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே.

நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’ அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது.

ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”

கனிமொழி செய்த குற்றமென்ன என்று கருணாநிதி பேசியிருக்கிறார்: “கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இரு என்று நான் தான் சொன்னேன். அவர் வேண்டாமென்றார். நான் வற்புறுத்திய காரணத்தால் சேர்ந்தார். வேதனையைப் பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதற்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.” தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி: “தலைவா, நாங்கள்லாம் சொந்தக்காரங்கன்னு இப்ப ஷோக்கா சொல்றீங்க இல்ல? இதே நினைப்பு ஏன் கலைஞர் டி.வி.ல பங்கு குடுக்கறப்ப உங்களுக்குத் தோணலே? கனியை வற்புறுத்தினா மாதிரி எங்களையும் கேட்டிருக்கலாமில்ல? பங்கு குடுக்கறப்ப அவங்க ஞாபகம் மட்டும்தான் வருது. மாட்டிக்கிட்டு கஷ்டப்படறப்ப சப்போர்ட் சேர்க்க மட்டும்தான் எங்க ஞாபகம் வருமா உங்களுக்கு?”

இனி கலைஞர் கருணாநிதி என்ன முயற்சி செய்தாலும் வரலாற்றில் அவர் பங்களிப்பு ஏற்கெனவே குறிக்கப்பட்டு விட்டது. 1917ல் நீதிக் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கத்தின் 94 ஆண்டு வரலாற்றில் கருணாநிதி ஓர் அடிக் குறிப்பாகவே எஞ்சுவார்.

சமூக இயக்கமான திராவிட இயக்கத்துக்கு வலுவான அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு அண்ணா காரணமாக இருந்தார்.

தமது குடும்ப சுயநலத்துக்காக அந்த அரசியல் அதிகாரத்தைப் பணயம் வைத்தவர் கருணாநிதி.

அவரிடமிருந்து இயக்கத்தை மீட்கும் பணிதான் இனி நிகழ வேண்டிய தி.மு.க, திராவிட இயக்க வரலாறு.

அந்த மீட்பை முன்னெடுத்துச் செல்ல தி.மு. க.வுக்கு இப்போதைக்கு இருக்கும் தலைவர், கருணாநிதியின் மகன் ஸ்டாலின்தான் என்பது வரலாற்றின் விசித்திரம்.

தலைவர்கள் திருந்தாவிட்டால் அவர்களைத் தூக்கி எறிபவர்களாகத் தொண்டர்கள் திருந்தினால்தான் வரலாறு மாறும்.

நன்றி.ஞானி.கல்கி

திருந்துமா தி.மு.க.?

27/05/2011

தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் ஒன்றுக்கொன்று மாற்று என்ற அடிப்படைத் தன்மையோடு இருந்த தமிழக அரசியலை, தேர்தல் முடிவுகள் மாற்றிவிட்டதா? முக்கிய எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. வந்துவிட்ட நிலையில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட தி.மு.க.வின் எதிர் காலம்?

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த பதிமூன்றாம் தேதி மாலை அ.தி.மு.க. கூட்டணி மூன்றுக்கு இரண்டு மடங்கு இடங்களுக்கு மேல் பெற்றுவிடும் என்று உறுதியாகத் தெரிந்த நிலை. மத்திய தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. அமைச்சர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். தோற்றவர்கள் மீது கற்கள் அதிகம் வீசப்படும் என்பது தெரிந்ததுதான். ஆனால், இந்தத் தோல்வியை யூகிக்க முடியாத அளவுக்கு ஆட்சி இயந்திரமும், கட்சி அமைப்புகளும் எங்களைக் கவிழ்த்து விட்டன. அலைக் கற்றை ஊழலும், ஆட்சியிலும், கட்சியிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும் மக்களை முகம் சுளிக்க வைத்து எரிச்சலடைய வைத்திருக்கின்றன. மிகவும் குறிப்பாகச் சொல்லப் போனால் கனிமொழி என்றைக்கு தில்லிக்கு மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பப்பட்டாரோ அன்றே தொடங்கியது அழிவுக்கான ஆரம்பம். புண்ணுக்கு சந்தனம் தடவுவது போன்று மக்களின் உண்மையான மன நிலையை தலைமைக்குச் சொல்ல தைரியமில்லாமல் எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். இனியும் இந்தக் காரணங்களை யாரும் வெளிப்படையாகப் பேசுவார்களா என்பதும் சந்தேகமே” என்று சோகமான குரலில் சொன்னார்.

அவர் சொல்வது சரிதான். இந்த மெகா தோல்விக்குப் பிறகு நாம் தொடர்பு கொண்ட பெரும்பாலான தி.மு.க. பிரமுகர்கள் ஏதேதோ காரணங்களை அடுக்கினார்களே தவிர கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களால் கட்சிக்கு ஏற்பட்ட அவப் பெயர் குறித்துப் பேசுவதைத் தவிர்த்தார்கள். சிலர் இன்னமும் ஒரு படி மேலே போய் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தான் தங்கள் தோல்விக்குக் காரணம் என்றுகூடச் சொன்னார்கள். கிட்டத்தட்ட அவர்கள் கூறுவது போன்றேதான் தலைமையும் சிந்திக்கிறது என்பதுதான் தி.மு.க.வின் துரதிருஷ்டம். ‘முரசொலி’ பத்திரிகையில் பிரவீண்குமாரின் நடுநிலைத் தன்மையைக் கேலி செய்து கட்டுரைகள் வரத் தொடங்கி விட்டன.

பிரவீண்குமார் மீது தி.மு.க. கோபமாக இருப்பதற்குக் காரணம் உண்டு. தேர்தலில் பணத்தை வாரிவீசி திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றை உருவாக்கக் காரணமாக இருந்தது தி.மு.க. அதேபோல் சிவகங்கை ஃபார்முலா என்ற ஒன்றை உருவாக்கியதும் தி.மு.க.தான். அது என்னவென்றால் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு இயந்திரமாகப் பார்த்துக் கொண்டு வரும் போது ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் படிவம் 20ல் கணினியில் பதியும்போது அதிகமான வோட்டுக்களை, வேண்டிய வேட்பாளர் கணக்கில் சேர்த்து விடுவதுதான் அந்த ஃபார்முலா. அந்தப் படிவத்தில் இறுதியில் கூட்டிப் பார்த்தால் பதிவான வோட்டுக்களோடு பொருந்தும். ஆனால் உள்ளே புகுந்து ஒவ்வொரு பதிவாகப் பார்த்தால் கோல்மால் புரியும்.

இதுபோன்ற தில்லுமுல்லை அறுபது தொகுதிகளில் நடத்த தி.மு.க. திட்டமிட்டிருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்பு இதுபோன்ற ‘தில்லுமுல்லு நடக்கப் போகிறது’ என்று ஜெயலலிதா தேர்தல் கமிஷனை எச்சரித்து விட்டார். தேர்தல் கமிஷன் உடனே வேட் பாளர்கள் பெற்ற வோட்டுக்கள் சரியாக கணினியில் பதியப்படுகிறதா என்று பார்க்க தனிப் பார்வையாளரையே போட்டுவிட்டது. தங்கள் திட்டம் தவிடுபொடியான வகையில் தி.மு.க.வினர் ஆத்திரப்படுவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?” என்று நம்மை கேட்டார் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. மேற்கு வங்கத்தில் தேர்தல் பார்வையாளராக இருந்தவர் இவர்.

தமிழக அரசியலில் ஒரு புது திருப்பத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் உண்டாக்கி விட்டன என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள். இதுவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஒன்றுக்கொன்று மாற்று சக்தியாகவும் எதிர்க்கட்சியாகவும் வெற்றி தோல்விக்கு ஏற்ப தங்களைத் தக்க வைத்துக் கொண்டன.

2016ல் நாங்களே ஆளும் கட்சி.இப்போது கூட்டணிக் கட்சியாக இருப்பதால் உடனடியாக எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க முடியாது. அதே நேரத்தில் ஆக்க பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட தாமதமாக்கவும் கூடாது. ஏனென்றால் அந்த இடைவெளியில் தி.மு.க. தலையைத் தூக்கும். இப்போதைய நிலையைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் தொடக்கம் நன்றாகவே இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை அணைத்துக் கொண்டு போகும் போக்குதான் தெரிகிறது. அவர் முழுக்க, முழுக்க வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க.வினரைப் பழிவாங்கத் தொடங்கினால் தேவையில்லாமல் அதற்கு மக்களின் அனுதாபம் வந்து சேரும்” என்கிறார்கள் தே.மு.தி.க. பிரமுகர்கள். எதிர்காலத்தில் போட்டி, அ.தி.மு.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது தி.மு.க. ஆனால், அடுத்த சில மாதங்களுக்குள் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் முடியும்வரை அ.தி.மு.க.- தே.மு.தி.க.வினரிடையே எந்தப் பிரச்னையும் வராது.

1996ல் கிட்டத்தட்ட இதே போன்ற நிலைதான். 200க்கு மேற்பட்ட இடங்களில் நாங்களும் த.மா.கா.வும் வென்றோம். த.மா.கா. எதிர்க்கட்சி, அ.தி.மு.க. மூன்றாவதாக வந்தது. ஆனால் 2001ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததே! அப்போது அ.தி.மு.க. இருந்த நிலையில்தான் நாங்கள் இப்போது இருக்கிறோம். அடுத்த ஐந்தா வது வருடத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு வாய்ப்பாக நாங்கள்தான் இருப்போம்” என்கிறார் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்பாதவர்கள். தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று கருதிய காரணத்தால்தான் எங்களைத் தோற்கடித்து ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்கள்” என்கிறார் அவர்.

இந்தச் சூழலில் தோல்விக்கான கார ணங்களை அலச தி.மு.க.வில் எந்தக் குழு வும் கூட்டப்படவில்லை. தலைமையின் கவனம் முழுக்க தோல்வியை ஒதுக்கி விட்டு, கனிமொழிக்கு என்னவாகும் என்பதிலேயே இருக்கிறதாம். யாரையும் திடீரென்று எங்களால் கைவிட முடியாது” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர். முதுமை மற்றும் நடமாட முடியாத நிலையில் கருணாநிதி சட்டமன்றத்துக்கு (அதுவும் கோட்டைக்கு) போவாரா என்பது சந்தேகமே என்கிறார்கள். எனவே அடுத்த தலைவராக அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று கட்சியை வீரியத்துடன் நடத்திக் கொண்டு போக வேண்டும் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

‘எந்தப் படைக்கு நீங்கள் தளபதி?’ என்று ஜெ. கிண்டலடிக்கும்படி வைத்துக் கொள்ளாமல் அவர் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்” என்கிறார்கள் தி.மு.க. பிரமுகர்கள். 1991ல் இதுபோன்ற ஒரு நிலையைத் தாண்டித்தானே வந்தோம்” என்றார் ஒரு தி.மு.க. பிரமுகர். ஆனால் அப்போது கட்சியில் குடும்ப ஆதிக்கமும் இதுபோன்ற அவப்பெயரும் இல்லை என்பதுடன் சோதனைகளைச் சந்திக்கும் உடல், மனவலிமையுடன் கருணாநிதி இருந்தாரே!