எம்ஜிஆர் பிறந்த நாள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான என தருமை கழக உடன்பிறப்புகளே! பெருமிதம் கொள்ளத்தக்க தன் வாழ்நாள் சேவைகளாலும், தன்னிடமிருந்து இந்தச் சமூகம் பெற்றுக்கொண்டதெல்லாம் நல்லதை மட்டுமே என்னும் பெருமை கொண்ட வாழ்வாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைத்த இடம் பிடித்து நினைவில் இருந்து நீங்காது வாழுகின்ற காவியமாம், கழக நிறுவனத்தலைவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் நாம் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியும், எல்லையில்லா இன்பமும் கொள்கிறோம்.

இந்த நன்னாளில், அந்த மாசற்ற தலைவரின் மங்காத நினைவுகளை, புரட்சித்தலைவர் மீது அளவற்ற அன்பும், பற்றுதலும் கொண்டிருக்கும் கழகக் கண்மணிகளாகிய உங்களோடும், தமிழக மக்களோடும் பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்தை தொடவிருக்கும் நிலையிலும், அவரது நிலைத்த புகழும், நிகரில்லா அழகும், நீதி உரைத்த அவரது தெளிவும், நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது வாழ்ந்திட்ட அவரது நேர்மைத் திடமும் இன்றும் தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

என் குடும்பம், என் மனைவி, என் துணைவி, என் மகன்கள், என் மகள்கள், என் பேரன், என் பேத்திகள் என்று தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, தன்னை சுற்றியே சிந்திக்கும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பிவிடுகிறது; தூரவே வீசிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் பதிவுகளும், சுவடுகளும் இல்லாத பாலைவனம் ஆகிவிடுகிறது.

ஆனால், தனக்காக வாழாது பிறரின் சிரிப்பில் தன் அகம் மகிழ்ந்து, பிறர் பசி தீர்ப்பதில் தன் மனம் நெகிழ்ந்து, இவ்வுலகில் இருக்கும் காலமெல்லாம், இல்லையென சொல்லாமல் எதிர்வந்து நிற்போர்க்கு அள்ளி அள்ளி கொடுத்து, பெறுபவர் முகம் பூரிப்பது கண்டு, அதில் உச்சி குளிர்ந்து, வள்ளலெனவே வாழுகின்ற மனித மகான்களை இந்தப் பூமி உள்ள காலம்வரை மானுடம் நெஞ்சார நினைத்தே போற்றும் என்பதற்கு நம் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் நிலைத்த புகழ் ஓர் நிகரில்லா சாட்சி அல்லவா!

‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி  மக்களின் மனதில் நிற்பவர் யார்?  மாபெரும் வீரர் மானம் காப்போர்  சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்றே, தான் பாடியபாடலுக்கு தானே இலக்கணம் ஆனவர் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அல்லவா? தன்னை பெற்றெடுத்த தாயையும், தன்னை ஆளாக்கி அழகு பார்த்த கலைத்தாயையும் கண்ணாகக் கருதி எந்நாளும் போற்றியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ‘நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்’ என்று தன்னை அரசியலில் அடையாளம் காட்டிய பேரறிஞர் அண்ணாவை கொடியிலும், கொள்கையிலும், தன் இதயத்திலும், இயக்கத்தின் பெயரிலும் கொண்டு ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்தை நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

கருணாநிதி என்னும் தீய சக்தியை வேறோடு சாய்த்து தமிழகத்தை ‘இரட்டை இலை’ மயமாக்கினார். ‘செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதெல்லாம் நடை முறைக்கு சாத்தியமாகாதே என்னும் யதார்த்தத்தை தான் பசித்திருந்த போதும், பட்டினி கிடந்தபோதும் உணர்ந்து உள்வாங்கிக் கொண்ட காரணத்தால், தன் கரங்களில் செங்கோல் கிட்டியதும் ÒபசிÓ என்ற வார்த்தையை பள்ளிக் கூட வளாகங்களில் இருந்தே விரட்டி அடிக்கும் விதத்தில், ‘சத்துணவுத் திட்டம்’ என்னும் சரித்திரப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்று, அவர் காட்டிய வழியில் தப்பாது நடக்கிற உங்கள் தாயின் கழக அரசும் விலையில்லா அரிசியை ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கே உள்ளம் குளிர்ந்திட அள்ளித்தந்து ‘பசி, பஞ்சம், வறுமை’ என்னும் அத்தனை வார்த்தைகளையும் தமிழகத்தின் எல்லையில் இருந்தே ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தி இருக்கிறது.

நம் கழக அரசு அன்னமிடுவதில் தொடங்கி, அறிவுசார் புரட்சிக்கு அச்சாரமிடுவது வரை எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கும் தலையாய முயற்சியில் விரைந்து செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்க்கு மடிக்கணினி, பாடப் புத்தகங்கள், சீருடைகள், பூகோள வரைபடத் தொகுப்பு, அக ராதி, வண்ண பென்சில்கள், காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணங்கள், சேட்டிலைட் கல்வி எனப்படும் செயற்கைக் கோள் வழிபாட வகுப்புகள் என உலகத்தரத்திற்கு நாளைய தமிழ் சமூகத்தை அழைத்துச் செல்லும் புரட்சியை நோக்கி உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான கழக அரசு வெற்றி நடைபோடுகிறது.

அதே வேளையில், வறுமைக்கோட்டிற்கு கீழே வாழப் போராடுகின்ற மக்களை கைதூக்கிவிடவும், ஏங்கி நிற்கும் ஏழைகளை தாங்கிப் பிடித்திடவும், விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகளை வழங்கி, பொருளாதார விடியலுக்கும், விவசாயம் சார்ந்த வெண்மைப் புரட்சிக்கும் தமிழகத்தை அழைத்துச் செல்லும் வேட்கையோடும் நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்படி, மக்கள் திலகம் அடித்தளமிட்ட அவரது மகத்தான வழியிலேயே மக்கள் சேவையை தொடர்ந்து ஆற்றி வரும் அதே வேளையில், புரட்சித் தலைவரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியையும், பல்கி பெருகிக் கிடக்கும் அவரது குடும்பத்தையும், தமிழ்நாட்டு அரசியலில் இருந்தே முற்றிலுமாய் அகற்றுவதற்கான காரியத்தை வெற்றிகரமாய் கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதர வோடும் செவ்வனவே செய்து கொண்டிருப்பதை இந்த நன்னாளில் எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். தலைமையின் மீது பற்றுதலும், நன்றியுணர்ச்சியும் கொண்டு பணியாற்றுவதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிஞ்சுவதற்கு இன்னொரு இயக்கம் இம்மண்ணில் இல்லை.

ஆனால், ‘கட்சியில் தலைமை நாற்காலியை பெரியாருக்காக காலியாக வைத்திருக்கிறேன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை தீயசக்தி கருணாநிதி காற்றில் பறக்க விட்டு, அந்த தலைமைப் பதவியை தன்வசம் ஆக்கிக் கொண்டார். எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் இல்லாது, கோடானு கோடி உடன்பிறப்புகளாகிய என் உயிரினும் மேலான எனதருமை கழகக் கண்மணிகளின் இன் முகத்தில் படரும் புன்னகைக் காகவும், ஏழரை கோடி தமிழ் மக்கள் என் மீது கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காகவும், என்னை மெய் வருத்தி உழைத்து, நான் புரட்சித் தலைவருக்கு அன்று தந்திட்ட உறுதியை, செய்திட்ட சத்தியத்தை இம்மியும் பிசகாமல் நிறைவேற்றி வருகிறேன் என்பதை பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெல்வதற்கு இன்னொரு இயக்கம் இம்மண்ணில் இல்லை என்னும் அரசியல் பொற்காலத்தை உருவாக்கி இருக்கிறோம். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’, ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்னும் புரட்சித் தலைவரின் வைர வரிகளை இன்னும் பட்டை தீட்டி ‘எப்படை வரினும் இப்படையே வெல்லும்’ என்னும் கம்பீர நிலைக்கு கழகத்தை உயர்த்தி இருக்கிறோம். நான் முன்பே சொன்னது போல், சாதனைகளுக்கும், வெற்றிகளுக்கும் முற்று என்பது கிடையாது.

கழகத்தின் வெற்றித்தேரோட்டம் தமிழகத்தின் எல்லை கடந்து இந்திய தேசத்தின் உச்சம் தொடுகிற பொற்காலத்தை எட்டுவதற்கு நாம் ஆயத்தமாவோம்! இந்திய அரசியலை தீர்மானிக்கும் ஈடு இணையில்லா இடத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இமயம் என உயர்த்திட இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்பதற்கேற்ப உலகமே உயர்த்திப் போற்றுகின்ற நம் ஒப்பற்ற தலைவராம், பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மலாம், கழகம் கண்டெடுத்த கலியுக வள்ளலாம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்வழியில் நாளும் நடப்போம்!

இனிவரும் நாளெல்லாம் நமக்கென்றே உழைப்போம்! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி மற்றும் இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே கம்பீரமாய் நிற்கும் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி உவகையுடன் கொண்டாடிட வேண்டும் என்று என தருமைக் கழக உடன் பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: