பட்டி மன்றமா? வெட்டி மன்றமா?

பருப்பில்லாத பண்டிகைகூட சாத்தியம்தாம்! ஆனால், டீ.வியில் பட்டிமன்றம் இல்லாத பண்டிகை தினங்கள்? சான்ஸே இல்லை! வரவர…. அந்தப் பட்டிமன்றங்களும், பெரும்பாலும் வெட்டிப் பேச்சு, செட்டப் ஜோக்குகள் என அரைச்சமாவாகவே ஆகிப்போச்சு” என முணுமுணுப்போரும் உள்ளனர்தான்.
நிஜத்தைச் சொல்லுங்க. இன்றைக்கு, பட்டிமன்றங்கள் எல்லாம் வெட்டி மன்றங்களாகிவிட்டது உண்மைதானா?” என்று சில பட்டிமன்றப் பேச்சாளர்களிடம் கேட்டு ஓசியில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியையே வழங்கி விட்டோம். ப்ளீஸ்… என்ஜாய்!

பாரதி பாஸ்கர்

‘பட்டிமன்றம்’ என்பது ஒரு பாரம் பரியமான கலை. நமது பக்தி மற்றும் சங்க இலக்கியங்களில் எல்லாம் கூட பட்டிமன்றத்திற் கான குறிப்புக்கள் இருக்கின்றன. பட்டிமன்றங்களில், எவ்வளவோ கருத்தாழமிக்க விஷயங்கள் அலசப்படுகின்றன. ஒரு பட்டிமன்றத்தில், எதிரணியில் இருப்பவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதே தெரியாது. உடனடியாக எதிர் வாதம் செய்யக் கூடிய திறமை இருந்தால் மட்டுமே பட்டி மன்றங்களில் பேச முடியும். அப்படி எந்த விதமான முன் தயாரிப்புமே இல்லாமல், பேசுவது என்பதே எவ்வளவு அற்புதமான கலை.

டி.வி.யில் நடைபெறும் பட்டிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பவர்களிடம் சென்று, நாளை ஒரு பட்டிமன்றத்தில் பேச உங்களுக்கு வாய்ப்புள்ளது! அது இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும்” எனச் சொல்லிப் பாருங்கள். நான் வரேன்” என போட்டிப் போட்டுக் கொண்டு ஓடி வருவார்கள். பட்டிமன்றத்தின் வலிமை அத்தகையது. இது காலத்தால் என்றுமே அழிக்க முடியாத கலை வடிவம். அது நிச்சயம் என்றுமே வெட்டி மன்றம் ஆகாது.

கு.ஞானசம்பந்தம்

முதலில் வெட்டிமன்றம் என்ற சொல் இதில் வருவதே தவறு. ஒரு வேளை பட்டி மன்றங்களில்ஒரே கருத்தை பேச்சா ளர்கள் வெட்டியும், ஒட்டியும் பேசுவதால் இப்படி ஒரு தலைப்பு வருகிறதா?

1,800 வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டோடு, தமிழ் மக்களோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் கலையை எப்படி வெட்டிமன்றம் என்று கூற முடியும்? இந்திய மொழிகளில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு நம் மொழிக்கு உண்டு. ஆம், தமிழ் மொழியில் மட்டும் தான் பட்டிமன்றங்கள் நடக்கின்றன. சங்க இலக்கியங்களின் சாரம்சத்தை, பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் எளியதொரு சாதனம்தான் பட்டி மன்றம். இதில் வெட்டிமன்றம் என்ற ஒரு சொல் எழுவதை கேட்கவே ரொம்ப கவலை அளிக்கிறது. தமிழ் இருக்கும் வரை பட்டிமன்றங்கள் நின்று, நிலைத்து, நீடித்து வாழும் என்பதில் சந் தேகமே இல்லை.

புதுக்கோட்டை ரா.சம்பத்குமார்

பட்டிமன்றங்களில் பொதுவாகப் பேச கூடிய தலைப்புக்கள் என்பது பக்தி, சமுதாயம், குடும்பம், இலக்கியம், திரை என ஐந்து வகையாக இருக்கும். இந்த அவசர உலகத்தில், எதையுமே முழுதாகப் படித்து தெரிந்து கொள்ளவோ, நின்று நிதானித்து அறிந்து கொள்ளவோ இயலாத ஒரு நிலை. நம் ஐம்பெருங் காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என எல்லாவற்றையும் ஒரு காப்ஸ்யூல் போல, இலக்கியத்தின் சாரங் களை காப்ஸ்யூல் போல பேச்சாளர்கள் பட்டிமன்றங்களின் வாயிலாகக் கொடுத்து வருகிறோம். மொழி, கலாசாரம், பண்பாடு கலந்த ஒரு விஷயம் தான் பட்டிமன்றம். அறிவின் முதிர்ச்சி அது.

அந்தக் காலத்தில் மன்னர்கள் கூட போர் தொடுக்கச் செல்வதற்கு முன், நன்மந்திரி, துன் மந்திரி என இரு வேறு மந்திரி களிடம் கருத்துக்களைக் கேட்பாராம். தாராளமாகப் போகலாம்” என நன் மந்திரியும், உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படும்” என துன்மந்திரியும் சோல்வார்களாம். பட்டிமன்றம் என்பது அக்காலந்தொட்டே இருந்து வருகிறது.. நல்ல அறிஞர்கள் ஒன்று சேர்ந்து அறிவைப் பரிமாறிக் கொள்ளும் மன்றமே பட்டிமன்றம்.

வெட்டி மன்றமே

அண்ணா சிங்காரவேலு

பட்டிமன்ற பேச்சாளர்கள் பெரும்பாலும் கற்பனைப் பறவைகளாகவே இருக்கிறார்கள். ஜோடனைகளும், துணுக்குத் தோர ணங்களும் மட்டுமே பல பட்டிமன்றங்களில் பிரதானமாக, பிரமாதமாக, இடம் பெறுகிறது. ‘புலி வந்துச்சா, அது அப்பறமா சாப்டுச்சு, இப்படிப் பேசிச்சு’ என இல்லாத ஒன்றை காட்டி உதாரணங்களை அடுக்குவது தான் இன்று அரங்கேறி கொண்டிருக்கிறது. புராணங்களையும், இதிகாசங்களையும் மட்டுமே பேசி, அதை யதார்த்த வாழ்க் கையோடு இணைந்து பேசாதவரை பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களே. வெற்று நகைச்சுவையை அள்ளித் தெளிக்க பட்டிமன்றங்களைப் பயன்படுத்தக்கூடாது. அன்பு, பாசம், காதல், என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி மக்களின் நிஜமான பிரச்னைகளைப் பற்றி அலசாதவரை பட்டி மன்றங்கள் நிச்சயம் வெட்டி மன்றங்களே!

புதுக்கோட்டை பாரதி பாபு

‘ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ங்கற இந்த வரிகள் ‘மணி மேகலை’ல வரும். அதாவது, ஒரு விஷயத் தைப் பற்றி வாதிடும் போது, எதைப் பேசணும் எதை பேசக் கூடாது என ஒரு வரை முறை இருக்கிறது. பேச வேண்டியதைப் பேசாமல் இருந்துவிட்டு, பேசக் கூடாததை பேசுவதால் தான் பல பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறி விடுகின்றன.

பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில், முழுக்க முழுக்க நகைச்சுவையா பேசுங்க போதும் என்பவர்களும் உண்டு, அப்படி அங்கே பொருட்சுவை இல்லாமல் வெறும் நகைச்சுவை மட்டுமே இருந்தால் அது எப்படி நல்ல பட்டிமன்றமாக இருக்க முடியும்? சிந்தனையற்ற சிரிப்பு என்பது உயிரற்ற உடல் போன்றது. மொக்கை ஜோக்ஸ் நிறையத் தேவை” என சிலர் கட்டாயப்படுத்துவதால், பல பட்டி மன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டியது நம் கைகளில் தான் இருக்கிறது.

எல். சிவா

இன்றைய பட்டிமன்றங்களில் நகைச்சுவை என்கிற பேரில் கோமாளித்தனம்தான் அரங்கேறி வருகின்றது. மக்களை எப்பாடு பட்டாவது சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, ஒருவரை ஒருவர் கீழ்த்தரமாக விமர்சனம் செது கொள்வது சகிக்க முடியாதது. நகைச் சுவை சீரியஸாகவும், சீரியஸான சிந்தனை கள் நகைச்சுவை போலவும் இன்று பட்டிமன்றங்களில் பேசப்படுகின்றன. இது எப்படி இருக்கிற தென்றால், ஸ்ருதி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், பாட்டு பாடுவது போல ஆகிவிட்டது. சந்தேகமே இல்லாமல், பட்டிமன்றங்கள் வெட்டிமன்றங்களே..

நடுவர் தீர்ப்பு : வெற்றி மன்றமே

நடுவர்: ஷாந்தி சிவராம்

இரு அணியின் வாதங்களையும் சுவைப்பட படிச்சு முடிச்சாச்சு. எல்லாம் சரி, பட்டிமன்றங்களைப் பற்றிய தீர்ப்பை ‘ டீ.வி. பட்டிமன்ற ரசிகையான ஷாந்தி சிவராமின் வீட்டுக் கதவைத் தட்டி னோம்! டீ.வி.யில் புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பான பட்டிமன்ற நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தவர், அதற்கு ஒரு பாஸ் கொடுத்து விட்டு, என்னது பட்டி மன்றங்கள், வெட்டிமன்றங்களா… அது எப்படி அப்படிச் சொல்லலாம்? ஒவ்வொரு பட்டிமன்றத்துலேயும் பாருங்க, எவ்வளவு பொது அறிவை சார்ந்த விஷயங்களைச் பேசறாங்கன்னு… ஒரு பண்டிகை, விழான்னு வந்தா டீ.வி.ல தமிழே தெரியாத நடிகைகளின் பேட்டிகளைப் பார்த்து ரசிப் பதை விட சூப்பரான பட்டிமன்றங்களை ரசிக்கலாம்… குடும்பத்தை சந்தோஷமா நடத்துவதற்கான எத்தனையோ நல்ல நல்ல டிப்ஸ்கள் பட்டி மன்றத்துல கிடைக் குதே…” என பட்டிமன்றங்களின் நற்பலன்களை எடுத்துக் கூறினார். மேலும், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்கள் வெரைட்டி யான வெற்றிமன்றங்களே தவிர, வெற்று மன்றங்களோ வெட்டி மன்றங்களோ கிடையவே கிடையாது என அடித்து (அட, ரிமோட்டதாங்க) கூறி விடை கொடுத்தார்.

நன்றி..மங்கையர் மலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: